வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

வீட்டுக்கு வீடு - கட்டுரை

 வீட்டுக்கு வீடு - கட்டுரை 

--------------------------


'அப்படி என்னங்க கதை கவிதைன்னு எழுதிக்கிட்டு, பாட்டு பாடிக்கிட்டு , பேசாம பேரன் பேத்தியோடு விளையாடுங்க . அதுக்கு மேலே என்ன சந்தோசம் வேண்டிக் கிடக்கு. '


'இல்லேம்மா , நமக்கும் ஒரு சொந்த சந்தோசம் கிடைக்குதே '


'சொந்த சந்தோசம்னு சொல்றதெல்லாம் சும்மா. யாருக்காக , எதுக்காக இதெல்லாம் செய்யணும். யாராவது பாராட்ட மாட்டங்களாங்கிற ஆசை தவிர வேற என்ன. '


'தேவையா அந்த ரெண்டு மூணு எமோஜி. ஒரு கமெண்ட் . இனிமே இதை வச்சு சம்பாதிக்க முடியாது. ஏதோ புள்ளைங்க கொடுக்கிற காசு போதும் , அதுங்களுக்கு ஒத்தாசையா வேற என்ன கேட்குதுங்க. அதுங்க புள்ளைங்களைப் பாத்துங்குக்கன்னுதானே . அதுவும் ஒண்ணொண்ணும் பண்ணுற அட்டகாசம் பார்க்க எவ்வளவு சந்தோசம்.அதை விட்டுட்டு . '


'அதுவும் சிறுசு , நைசா நம்மளை பார்த்துக்கிட்டே போயி பைப்பை திறந்து விட்டு தண்ணியிலே கையை காண்பிக்கிறப்போ , அதைக் கொஞ்ச நேரம் ரசிச்சுட்டு, அப்புறம் ' வேண்டாம்டி கண்ணு ' ன்னு தூக்கி வச்சு அதோட வேற விளையாட்டு விளையாடற சுகம் எப்படி.'


' இந்தப் பாரு , தண்ணியிலே விளையாடறா. தூக்குன்னு ' பொண்ணுகிட்ட சொல்லிட்டு ரூமுக்குள் போயி கதவைச் சாத்திக்கிட்டு பாட்டு என்ன வேண்டிக் கிடக்கு '


'அதுதான் அதுக பாத்துக்கிறதுகளேம்மா , அப்புறம் என்ன, அவங்களுக்கும் பொறுப்பு வர வேணாமா '


'அதெல்லாம் பொறுப்பு இல்லாமலா நம்மளை இந்த அளவு

பாத்துக்கிறதுக . ஏதோ நம்மளை வளர்த்த மாதிரி அதுக புள்ளைங்களையும் பார்த்துக்கணும்னு எதிர் பார்ப்பு. இது கூட இருக்கக் கூடாதா .'


' இந்த இசை புதிது குழுவில் அட்மின் மேடத்தைப் பாருங்க. எம்புட்டு இசை ஞானம் . குரல் வளம். இருந்தும் பேரன் பேத்திகளைப் பார்த்துட்டு ராத்திரியிலே டைம் கிடைச்சா வந்து எல்லோரையும் பாராட்டிட்டு , அப்புறமா ஒண்ணோ ரெண்டோ பாட்டு பாடுறாங்க. அப்படி இருக்கணுங்க குடும்பத்தைப் பார்த்துக்கிற சமத்து' .


'இப்ப என்ன பண்ணனும்கிறே , என்னோட பாடுற , எழுதுற ஆசையை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு , குழந்தைகளோடவே நாள் முழுக்க இருக்கணும்கிறாயா . '


'அப்படி எல்லாம் அரைகுறை விருப்பத்தோடு இருக்கக் கூடாது. முழுசா அதுகளை ரசிச்ச விளையாடுற ஆசைதான் முதல் ஆசையாய் இருக்கணும். இன்னும் எத்தனை வருஷம் இருக்கப் போறம் நாம '.


'போனப்புறம் , ஒருநாள் துக்கம் விசாரிச்சிட்டு, மறுநாளே அவங்கவங்க வேலை இந்தக் குழு நண்பர்களுக்கு. நம்ம பசங்கள் தான், நம்ம அதுங்க புள்ளைங்களோட விளையாண்டதை, பார்த்துக்கிட்டதை ஆயுசு முழுக்க நினைச்சிட்டு இருக்கப் போறாங்க. '


'உங்க ஆசையை மூட்டை கட்டி வைங்கன்னு சொல்லலே. அதனாலே உண்மையான சந்தோசம் கிடைக்காது . பேரன் பேத்திகளோட விளையாடுறது தான் உண்மையான சந்தோசம். வாழ்க்கையின் ஆரம்பத்திலே இருந்துக்கிட்டு , நம்மோட சிரிச்சு விளையாடற அனுபவத்துக்கு ஏங்கிகிட்டும். அது கிடைக்காட்ட, ஏதோ டி வி யிலே வர ஆட்டம் பார்த்து ஆடிக்கிட்டும் இருக்கிற அந்தச் சிறுசுகளைப் பார்க்க பாவமா இல்லையா. '


' வேலை வேலைன்னு நமக்கும் சேர்த்து சம்பாதிச்சுக்கிட்டு இருக்கிற நம்ம புள்ளைங்களைப் பார்க்கிறப்பவும் பாவமா இல்லையா. அதுக தூங்கிற நேரத்திலே , தூக்கம் வராம புரண்டுகிட்டு கிடக்கிறீங்களே . அப்ப பாடுங்க, எழுதுங்க . உங்களுக்கும் சந்தோசம், குழு நண்பர்களும் தூங்கிக் போயிடுவாங்க . அவங்களுக்கும் சந்தோசம் . '


'யோசிச்சா சரியாதான் தோணுதும்மா. ஆனா,பகலிலே, மொபைல்லே பதில் போட்டுக்கிட்டு, பாடிக்கிட்டு இருக்கிற அந்த சந்தோசம் போச்சேம்மா. '


'ஏதோ ஆசை கூடாதுன்னு வாய் கிழிய கவிதை எழுதுறீங்களே. இந்த சின்னச் சின்ன ஆசைகளை அடக்கி மடக்கி வச்சிட்டு, பேரன் பேத்திகளோட விளையாண்டு, பேசிக்கிட்டு , இருந்து பாருங்க. இந்த மத்தவங்க பாராட்டுக்கு ஏங்கிற ஆசை ஓடியே போயிடும். அதுங்க சிரிப்பைப் பார்க்கிற ஆசை கூடிப் போயிடும். குறையவே குறையாது .'


'குட்டிப் பொண்ணு , இங்கே வந்து உட்காரு. அண்ணனோட கேரம் விளையாட்டு ஆடப் போறேன். வா வந்து கேரம் காயின் எல்லாம் கலைச்சுப் போடு ' . நம்ம வம்பு நம்மை விட்டுப் போகாதில்ல .


'இது சமத்து பையனுக்கு அழகு ' என்று காதில் கிசுகிசுத்துப் போன மனைவியைக் காதல் பார்வையோடு பார்க்கும் போது . 'தாத்தா , இங்கே பாருங்க, தங்கச்சி காயின் எல்லாம் கலைச்சுப் போட்டுட்டா ' என்று அழ ஆரம்பிக்க, அதைப் பார்த்து குட்டிப் பொண்ணு பொக்கை வாயோட சிரிக்க , 'உங்க பாடு' என்று சிரித்தபடி ரூமுக்குள் சென்று தனது ஆன்லைன் மீட்டிங்கில் தனது பணி தொடர்பாக நிம்மதியாக ஆங்கிலத்தில் உரையாடச் சென்று விட்ட பெண்ணைப் பெருமையோடு பார்த்தாள் மனைவி .


மொபைலில் நோட்டிபிகேஷன் மெசேஜ். ' என்ன சார் உங்க பாட்டை இன்னிக்குக் காணோமே'


------------------------நாகேந்திர பாரதி


My Poems in Tamil and English are available 


செவ்வாய், 22 ஜூலை, 2025

சாதனைச் சிந்தனை - கட்டுரை

 சாதனைச் சிந்தனை - கட்டுரை 

---------------------------


'அப்படி என்னங்க அவ்வளவு சிந்தனை . '

'ஒண்ணேமில்லேம்மா , வாழ்க்கையிலே ஒண்ணுமே சாதிக்கலையேன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன் '

'சாப்பாடு கிடைக்குதுல்ல தினசரி. அந்தச் சாதனை போதாதா. தினசரி , ரோட்டிலே எத்தனை பிச்சைக்காரர்கள் பார்க்கிறோம் . .


'இல்லைம்மா , அது விதி. ஏதோ கர்மா அப்படி இப்படின்னு சொல்றாங்களே , அதுவா இருக்கலாம்.'


'ஆசை அறுமின் , ஆசை அறுமின் ' னு எல்லோரும் இருக்க முடியுமா .'


'இப்ப நீங்க வந்து வெண்டைக்காயை அறுமின். கை வலிக்குது. '


அது சரி. நறுக்கிறேன். சாதனைகள் இல்லைன்னா இவ்வளவு வாழ்க்கை முறை மாற்றங்கள் வந்திருக்குமா '.


'வாழ்க்கை மாற்றங்கள் னு சொன்னேங்களே . அதுக்கெல்லாம் அடிப்படையான விஞ்ஞானிகள் பேரு ஏதாவது தெரியுமா, சொல்லுங்க.


' அது வந்தும்மா .... அவங்கள்லாம் இதை எதிர்பார்த்துச் செய்யலைம்மா . சுய திருப்தி. அவ்வளவுதான். '


'இப்ப உங்களுக்கு சுய திருப்தி கிடைக்கணும் அவ்வளவு தானே. வாங்க . வெண்டிக்காயை நறுக்கிட்டு , இந்தக் கீரையைக் கொஞ்சம் ஆய்ஞ்சு கொடுங்க. ஏக திருப்தி கிடைக்கும் '


'அது சரி. ஆய்ந்து கொடுக்கிறேன். அதுக்கும் மேலே ஏதாவது செய்யணும் பெருசா வாழ்க்கையிலே எல்லோருக்கும் பயன்படுற மாதிரி . '


'அதுக்கும் மேல பெருசா செய்யணும்னா , அந்த அலமாரியில் மேல இருக்கிற பெரிய பூசணிக்காயை நறுக்கிக் கொடுக்கலாம் . புள்ளைங்களுக்கு ரெம்பப் பிடிக்கும். எல்லோருக்கும் பயன்படுற மாதிரி யும் இருக்கும். '


'அப்புறம் பால்காரன் போட்ட பாக்கெட்டு ஒண்ணு ஒழுகுது. போன் பண்ணி அவனைக் காய்ச்சுங்க. அப்புறம் பாலக் காய்ச்சி எனக்கும் ஒரு கப் காபி. தலை வலிக்குது.


'காலையிலே இருந்து எவ்வளவு வேலை. வீட்டைப் பெருக்கி, வாஷிங் மெஷின்லெ ரெண்டு தடவை துணியைப் போட்டு காய வச்சு, இப்ப வந்து ' சாதனை ' அது இதுன்னு ' பேசி கடுப்பைக் கிளப்பாதீங்க,


'கேஸ் தீந்து போச்சு. நெட்டில் புக் பண்ணுங்க. அப்புறம் டாக்டர் கிட்டே பேசி மத்தியானம் டைம் வாங்குங்க. உடம்பு வலிக்கு மாத்திரை வாங்கணும். '


'சாயந்திரம் . நம்ம அந்தக் காலத்திலே சேர்ந்து டூரிங் டாக்கீஸ் லே பார்த்த ' எங்க வீட்டுப் பிள்ளை ' படம் டிவியிலே போடறான். சேர்ந்து பார்க்கலாம்.


'என்னடி, காலையிலே பொங்கி எழுந்த சாதனைக் கனவை பொசுக்குன்னு அமர்த்திட்டேயடி '


'சரி அப்படி என்னதான் சாதனை பண்ணனும்னு நினைக்கிறீங்க ;


இல்லேடி, இந்த இசை புதிது குழுவில் பாடுறேன்ன்ல. பாடிப் பாடி குரலைக் குளுமையாக்கி , நம்ம பாட்டு ஒருநாள் போடலேன்னாலும் , ஏன்னு கேட்க வைக்கணும். இன்னிக்கிப் பாரு 'ஒரு நண்பர்  பாட்டு இன்னிக்கு இல்லையே ' ன்னு அந்தக் குழு அட்மின்  மெசேஜ் போட்டிருக்காங்க. அது மாதிரி நம்ம பாட்டைப் பத்தியும் கேட்க வைக்கணும். '


'எங்கே கேட்கிறது. நீங்கதான் ஒரு நாள் விடாம , மாக்ஸிமம் போடுற அஞ்சு பாட்டையும் பாடிப் போட்டுறீங்களே . இதிலே, தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தமிழிசை , டூயட் ன்னு கணக்கு வேற. அப்புறம் எப்படி அவங்க கேட்பாங்க. முதல்லே, ஒரு நாளைக்கு ஒரு பாட்டு உருப்படியாய் போட்டுட்டு , ஒரு நாள் விட்டு பாருங்க. அப்புறம் கேட்பாங்க. அது உங்களாலே முடியாது. ஜலதோஷம் பிடிச்சாலும், அந்தக் குரல்லே ஜேசுதாஸைப் பிடிக்கிறேன்னு முயற்சி பண்ற ஆளு நீங்க. இதிலே சாதனை வேற . வாங்க , வந்து கீரையை ஆய்ங்க.'


போன் அடிக்கிறது.

நண்பர் சாம்பசிவம்.

'என்ன சார் , ரிடையர் ஆனப்புறம் பாடுறதிலே ரெம்ப பிசி ஆயிட்டீங்க போல இருக்கே. முந்தி எல்லாம், ' கதை புதிது' குழுவில் என்னோட கதைகள் பத்தி ஒரு பக்கம் விமர்சனம் போடுவீங்க .இப்போ வெறும் எமோஜி தான் . அதுவும் கை தட்டுற எமோஜி க்குப் பதிலா, பக்கத்திலே இருக்கிற அழுகிற மூஞ்சி எமோஜியைக் விரல் தவறியோ தவறாமலோ அழுத்தி விடுறீங்க. சோகக் கதைக்கு பரவாயில்லை. எல்லாத்துக்கும் இப்படிப் பண்றீங்களே சார் , இது நல்லா இருக்கா . '


'இல்லே சார், அது வந்து நீங்க எப்பவுமே சோகக் கதைகள் தானே எழுதுவீங்கள்னு நினைச்சு படிக்காமலே , அய்யய்யோ , உண்மை வந்திருச்சே , சாரி சார்' என்று சொல்லும் போதே அவர் தொலைபேசி கட் ஆனது.


போச்சு நம்ம பாட்டுக்கும் , கேட்டோ கேட்காமலோ கிடைக்கிற ஒரே ஒரு கும்பிடு எமோஜியும் காலி.


'ஏங்க ஒரு மாதிரி ஆயிட்டீங்க. ஏதோ சாதனைன்னு சொல்ல வந்தீங்களே. பாடுங்க . நான் கேட்டு எமோஜி போடுறேன். ஒரு எமோஜி வந்தாலே, உங்க பாட்டுக்கு அது ஒரு சாதனைதானேங்க '


---------------------நாகேந்திர பாரதி


My Poems in Tamil and English 


சனி, 19 ஜூலை, 2025

வீட்டுத் திண்ணை - கவிதை

வீட்டுத் திண்ணை - கவிதை 

------------------


பசுஞ்சாணி பூசிவிட்டு 

மண்ணை  மெழுகி விட்டு 


வீட்டோரத் திண்ணைக்கு 

கோலமும் போட்டு வச்சா 


ஊருக்கு விருந்தாளி 

வந்தாக்க  உட்கார்ந்து 


ஆசுவாசம் செய்றதுக்கு 

அரட்டை நடிக்கிறதுக்கு 


சாராய வாசனையோடு 

சீட்டுக் கட்டோடு 


சாயந்திரம் வந்தார்கள் 

அயலூர்ப் பெருசுகள்


மறுநாள் திண்ணை 

வெறும் மண் திண்ணை 


------------------நாகேந்திர பாரதி 


My Poems in Tamil and English  


பசி அறிந்தவன் - கவிதை

 பசி அறிந்தவன் - கவிதை 

-------------------------


பத்து மணி ஆனாலே 

ரோட்டோரம்  வந்து நிக்கும் 


அவனைப் பார்த்ததுமே 

வாலை ஆட்டிக்கிட்டு  


பாஞ்சு வருவதெல்லாம் 

பசியோட விளையாட்டு 


மிச்சக் காசிலே 

வாங்கின ரொட்டியினைப் 


பிச்சுப் போடுறதில் 

பிச்சைக்காரன் சந்தோசம் 


-----------------நாகேந்திர பாரதி 


My Poems in Tamil and English 


கருக்காத மேகம் - கவிதை

 கருக்காத மேகம்  - கவிதை 

-------------------------


இந்த வருஷமும் 

தவறாமல் வருகை தந்த  


கூழைக்கடா, கொக்கெல்லாம் 

தேடிப் பார்த்தாலும் 


பச்சைப் பயிராக 

ஒண்ணுத்தையும் காணோம் 


உள்ளூரில் கஷ்டப்படும் 

உழவன் வயிற்றையே 


மதிக்காத மேகமெல்லாம் 

கருப்பாக மாறாது 


ஊரு விட்டு ஊரு வந்த 

பறவையின் பசிக்காக 


----------------------நாகேந்திர பாரதி 



My Poems in Tamil and English  


முடியாத வேண்டுதல் - கவிதை

 முடியாத  வேண்டுதல்  - கவிதை 

---------------------------------


கண்மாய்க் கரை மேட்டிலே 

கருத்த முனுசாமிக்குத்  

தேங்காய் உடைக்கணும் 


ஊர்க்கோயில் சனீஸ்வரனுக்கு 

மாசம் பூரா சனிக்கிழமை   

எண்ணை விளக்குப் போடணும் 


குலதெய்வம் கோயிலுக்கு 

அந்த வருஷம்  வயித்திலே

 மாவிளக்கு வைக்கணும் 


சிறுசுகளின் நோய் நொடிக்கு 

ஒவ்வொரு கோயிலிலும் 

வேண்டுதலை முடிச்சுட்டா  


பாடையிலே ஏத்து முன்னே அவுத்த  

பச்சைச் சேலையிலே 

முடிஞ்சு வச்ச ஒரு ரூபாய் 


எந்தச் சாமிக்கு, எந்தப் புள்ளைக்காக,   

சொல்லாமப் போய்ச் சேர்ந்தா 

சுடுகாட்டுக்குப் பெரியாயி 


-------------------நாகேந்திர  பாரதி 


My Poems in Tamil and English 


வெள்ளி, 20 ஜூன், 2025

மேகங்கள் -சிறுகதை

 மேகங்கள் -சிறுகதை

-------------------


மேகங்கள் விலகும்போது வெளிச்சம் தந்துவிட்டு , மறைக்கும் போது ஒளிந்து கொண்டு, விளையாட்டு காட்டிக் கொண்டிருந்த சூரியனைப் போல்தான் தன் வாழ்க்கை உள்ளதோ என்று அவள் எண்ணிக்கொண்டு பால்கனியில் உட்கார்ந்து அந்த மாலைச் சூரியனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள்.


கணவன் குழந்தைகள் எல்லாமே அந்த மேகங்கள் தானோ. அவர்கள் கூட இருக்கும்போது தன்னைப் பற்றிய நினைவே எங்கோ ஒளிந்துகொண்டு தன் சுயமே மறந்து போன பரப்பிரம்ம நிலையோ . இன்னும் கணவன் அலுவலகம் விட்டு வரவில்லை. குழந்தைகளும் பள்ளி விட்டு வரவில்லை. மேகங்கள் விலகிய வெளிச்சம் வந்த நிலையில் இப்போது 'தான் யார், தன் வாழ்க்கையின் நோக்கம் என்ன ' என்ற எண்ணங்கள் தலை தூக்க ஆரம்பித்தன அவளுக்கு, எப்போதும் போல்தான் இந்த நேரத்தில்.


பெற்றோர் படிக்க வைத்து விட்டுப் போய் விட்டார்கள். கணவன் என்று ஒருவரைக் கை காட்டி விட்டு போயாச்சு. அவனுக்கும் தனக்கும் வரப்போகும் முதுமைக்குத் துணையாக வந்தவர்களா இந்தக் குழந்தைகள். இல்லை , 'உங்கள் கடமை எங்களை பெற்றது, வளர்த்தது, நாங்கள் எங்கள் கடமையைச் செய்யப் போகிறோம்' என்று போய் விடுவார்களா.


வேலைக்குப் போகும் பெண்களைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது. இருக்கலாம் அவர்கட்குப் பிரச்னைகள் , வீட்டுப் பிரச்னைகளோடு சேர்த்து . ஆனால் அவர்கள் அலுவலகத்தில் இருக்கும் நேரம், அவர்களின் படிப்புக்கும், திறமைக்கும் கிடைத்த நேரம். அங்கே ஏதோ ஒரு இன்பம் இருக்கலாம். அது ஏன் தனக்குக் கிடைக்கவில்லை. பெற்றோர்கள் பொறுப்பைக் கழித்து விட அவசரமாய்ச் செய்து வைத்த கல்யாணமா. வந்த கணவனும், இவளை சமையலுக்கும், வேலைக்கும் ஆள் கிடைத்து விட்டதாக நினைத்து நடத்தும் கோலமா. 'தான் ஒரு முழுநேர சமையல்காரியாக மாறிவிட்டோமோ ' என்ற நினைப்பே கவலையைக் கொடுத்தது .


பட்டப் படிப்பு சான்றிதழ்கள், எங்கே இருக்கின்றன. அவளுக்கே தெரியாது. இருக்கிறதா, ஏதோ ஒரு பழைய பெட்டியில், கசங்கிப் போய்க் கிடக்கலாம். தேடித் பார்க்க வேண்டும். கணவனிடம் மன்றாடி , ஏதோ ஒரு வேலையில் , படிப்புக்கு ஏற்ற வேலையில் சேர வேண்டும். சொந்த சம்பாத்தியத்தில், ஒரு சேலை எடுக்க வேண்டும்.


தன் கூடப் படித்த எத்தனையோ பெண்களை எப்போதாவது , இவள் இடுப்புக் குழந்தையோடு பார்த்து விசாரிக்கும் போதெல்லாம். அவர்கள் அலுவலகம் செல்லும் அவசரத்தில் . தானும் அதே அவசரத்தில், அவர்களைப் புறக்கணித்து ஓட வேண்டும். தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஏன் ஒரு நெருங்கிய தோழனோ, தோழியோ அவளுக்கு அமையவில்லை. இவள்தான் யாரிடமும் நெருங்காமல். இருந்து விட்டாளோ. ஆனால் வாட்சப்பில் எத்தனையோ நண்பர்கள். அங்கே இவள் போடும் சமையல் குறிப்புகளுக்கு எவ்வளவோ பாராட்டுக்கள்.


வாட்சப்பில் மணிச் சப்தம். 'உங்கள் சமையல் குறிப்பைப் படித்து வீட்டில் செய்த தின்பண்டம் என் பெற்றோருக்குப் பிடித்திருந்தது . தொடர்ந்து போடுங்கள் மேடம். ' மற்றும் ஒரு மெசேஜ். ' ஏன் நீங்கள் உங்களின் சமையல் திறமையைக் காண்பிக்க ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிக்கக் கூடாது'. சூரியனைப் பார்த்தாள்.அவன் சிரித்துக் கொண்டு இருந்தான்.'என்னை மறைக்க முடியாது. நான் ஆடுவது விளையாட்டு. உள்ளே இருந்து கொண்டு தான் இருக்கிறேன் உஷ்ணத்தோடு ' என்று சொல்வது போல் தோன்றியது அவளுக்கு. அப்போது சூரியனைச் சுற்றி மேகங்கள் நெருங்கிக் கொண்டு இருந்தன.


அழைப்பு மணி அடிக்கும் சப்தம். குழந்தைகள் வந்து விட்டார்கள்.


-------------------நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


செவ்வாய், 17 ஜூன், 2025

போட்டோ - சிறுகதை

 போட்டோ - சிறுகதை 

--------------------------

மறுபடியும் மதுரையில் திவ்யா . அதே பழைய வீடு, கல்லூரியில் படித்தபோது இருந்த வீடு . அப்பா , அம்மாவுக்கு அந்த வீட்டை இடித்து புது விதமாகக் கட்டுவதில் விருப்பம் இல்லை. இந்த முற்றம், இந்தக் கொல்லை, தாங்கி இருக்கும் அத்தை நினைவுகளைக் கலைக்க விருப்பம் இல்லையாம். அவர்கள் நம்பிக்கை. அந்தப் பழைய திருநீற்று டப்பாவில் கூட அத்தையின் மணம் வீசுகிறதாம். ஆமாம். பாட்டி இருந்தபோது இருந்தபடியே எல்லாம். பூஜை அறை உட்பட.


அப்போதெல்லாம், எல்லாமே அத்தை சாம்ராஜ்யம்தான் . அன்றைய காலை உணவு, குழம்பு , காய்கறி எல்லாமே அவள் விருப்பம்தான். அந்த வயதிலும் இங்கும் அங்கும் ஓடிக் கொண்டும் , வேலையாட்களிடம் வேலை வாங்கிக் கொண்டும் ,சித்தி கல்யாணம், மாப்பிள்ளை பார்த்ததில் இருந்து, கல்யாண மண்டபம் எல்லாமே அவள் பார்த்துப் பார்த்துப் பண்ணியது தான்.


'எல்லாமே அத்தை பார்த்துக் கொள்வாள்'. அந்த வீட்டின் தாரக மந்திரமே இதுதான். எப்படி, எல்லாம் அவளுக்குத் தெரிந்திருந்தது . பள்ளிக்கூடம் கூடப் போனது இல்லை. எல்லாம் பார்த்துப் பழகித் தெரிந்து கொண்டது தான். வாக்கப்பட்டுப் போன இடத்தில் சில வருடங்களிலேயே தாலி அறுத்து வந்ததில் இருந்து இங்கே அவள் தம்பி வீடு தான். இவளின் அப்பாதான் அந்தத் தம்பி. இந்தக் குடும்பம்தான். அவள் வாழ்க்கை என்று ஆகிப்போனது .


ஒருநாள் பொட்டென்று அவள் போனபின் இவள் அம்மாவும் அப்பாவும் பட்ட பாடு. 'மிளகாய் டப்பா எங்கே ' என்ற கேள்வியில் இருந்து அம்மாவும், 'அந்த சிவப்புக் கலர்ப் பணப்பை எங்கே ' என்ற கேள்வியில் இருந்து அப்பாவும் மீண்டு வர ரெம்ப நாட்கள் பிடித்ததைப் பார்த்துக் கொண்டே வளர்ந்தவள் தானே இவள். அதுவும் இவள் தன் சாயல் என்பதில் அத்தைக்கு ஏக சந்தோசம். 'திவ்யாவை ஒண்ணும் சொல்லாதே ' ஒரே வார்த்தை தான் அத்தையிடம் இருந்து அனைவர்க்கும்.


இப்படி அத்தை பொண்ணாக இருந்து வளர்ந்த அவளுக்கு அவள் மறைவு பெரும் அதிர்ச்சிதான். காலம் தான் எல்லாவற்றையும் மாற்றியது. இன்று அவள் சென்னையில் ஒரு கணினி நிறுவனத்தில் உயர் அதிகாரி. அயல் நாடுகள் பல சென்று, தனது பேச்சுத் திறமையால் பல பெரிய ஒப்பந்தங்கள் முடித்து , தனது நிறுவனத்தை இந்தியாவின் உயர்தர நிறுவனமாய் மாற்றியதில் முக்கிய பங்கு அவளுக்கு.


திருமணம் செய்து கொள்ள ஆர்வம் இல்லை. பழகிய பல ஆண்களின் பார்வைகளின் அர்த்தங்களை புரிந்து கொள்ளும் பக்குவம் இள வயதிலேயே ஏற்பட்டு விட்டதால் எந்த ஆணின் மேலும் நம்பிக்கை ஏற்படவில்லை இன்று முதிர் கன்னியாகியும் , தன் அழகு, அறிவு, ஆற்றல் பற்றிய கர்வமும், நம்பிக்கையும் கொஞ்சமும் குறையாமல் வாழும் நவயுக யுவதி அவள். அவளிடம் ப்ரொபோஸ் செய்த எத்தனையோ ஆண்களை நிர்தாட்சண்யமாக நிராகரித்திருந்தாள். காரணங்களை யோசிக்க வில்லை. வேண்டாம் ஆண்துணை என்ற ஒரு பிடிவாதம்.


ஆனால் , ராபெர்ட்ஸை அப்படி நினைக்க முடியாமல் தடுமாறிய சந்தர்ப்பங்கள் பல உண்டு. காரணம் எப்போதும் புன்னகை மாறாத அவன் முகமா, அதற்குள் தெரியும் ஒரு குழந்தைத்தனமா, வேலையில் மூளை களைத்துச் சோர்வு அடையும் நேரத்தில் பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு ,ஒரு ஜோக் அடித்துச் சிரிக்க வைத்து விட்டு போய்க் கொண்டே இருப்பானே , அந்த அலட்சியமா .


பிறந்த நாள், அலுவலக முக்கிய நாள், இவற்றின் போது அனுப்பும் வாழ்த்துக் குறுஞ்செய்தி மட்டுமே, தனிப்பட்ட செய்தி. மற்றபடி , வேறு சிலர் போல் 'அசடு வழியும், அன்பு என்ற போர்வையில் ஆசை வழியும் ' எந்தக் குறுஞ் செய்தியும் அவனிடம் இருந்து வந்தது இல்லை. இவளது கம்பெனியின் உயர் தர வாடிக்கையாளர்களில் ராபெர்ட்ஸும் ஒருவன்.


நியூயார்க் செல்லும் போதெல்லாம் அவனைச் சந்திப்பது உண்டு. கம்பெனி விஷயமான பேச்சுக்கள், சின்னப் பார்ட்டி அவ்வளவுதான். ஆரம்ப அறிமுகத்தில் ஒரு முறை, ஒரே ஒரு முறை சொல்லி இருக்கிறான் . டெல்லியில் இருந்து இங்கே படிப்பதற்கு வந்தவன், வேலை , தொழில் என்று இன்று அமெரிக்க பிரஜை. திருமணம் ஆகவில்லை. அதற்கு மேல் சொல்லவில்லை . இவளைப் பற்றியும் எதுவும் கேட்கவில்லை. இவளும் சொல்லவில்லை. வேலை விஷயம், அவ்வளவுதான். இப்போது ஏன் அவன் நினைப்பு, திரும்பி வந்தாள்.


இதோ தனது தொடர் வேலைகளுக்கும், பிரயாணங்களுக்கும் இடையில் கிடைத்த ஒரு வார இடைவெளியில் மதுரையில் அம்மா அப்பாவுடன் சேர்ந்து அந்தப் பழைய வீட்டில் இருக்கும் ஆசையுடன் வந்திருக்கும் இவளின் எண்ணங்கள் வீட்டின் நினைவில் பின்னோக்கி ஓடின . அந்த வீட்டின் இயல்பு அப்படி இழுத்துச் சென்றது. இதோ இங்கு தானே , அத்தை சடை பின்னி விட்டாள். இதோ இங்கு விழுந்து பட்ட தழும்புதானே இன்னும் முழங்காலில். இன்னும் எத்தனையோ எண்ணங்களில் மூழ்கியவளை அந்தக் குரல் உசுப்பி விட்டது .


'கீரை வாங்கலையோ கீராயி'. இது முத்தம்மா குரல்தான். ஆமாம். அவளேதான். ஓடிப் போய்ப் பார்த்தாள். உடல் தளர்ந்து, முகம் சுருங்கி , ஆனால், அந்தப் புன்னகை மாறாமல் ' கூடையை இறக்கி விடு தாயி '

என்றவளின் கூடையை இறக்கி திண்ணையில் வைத்தவளை மேலும் கீழும் பார்த்து விட்டுக் கேட்டாள். ' நீ திவ்யா தானே . ஒல்லிக் குச்சியா இருந்தவள் , நெடு நெடுன்னு வளர்ந்து உடம்பு பூசின மாதிரி ஆகி , அம்பாள் மாதிரி இருக்கே. அப்படியே உங்க அத்தையோட சந்தன நிறத்தோடு சந்தன மணமும் சேர்ந்து மணக்கிறேடி தாயி ' என்றவளிடம் 'அந்த சந்தன மண உபயம் மிலன் நகர பெர்ப்யூம் பாட்டி 'என்று சொல்லாமல் நினைத்துக்கொண்டு 'எப்படி இருக்கீங்க பாட்டி' என்றாள்.


'எனக்கென்னடியம்மா , இந்தக் கீரையும் , இந்தக் கூடைக்குள் இருக்கிற கிருஷ்ணனும் சோறு போடறான். பொண்ணுங்க புள்ளைங்களுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணியாச்சு . 'தன் கையே தனக்குதவி 'ன்னு காலையிலே இந்தக் கீரை வியாபாரம். அப்புறம் அவரு, அதான் என் புருஷன் , அவரும் நல்லாத்தான் இருக்காரு , அவரு காய்கறிக் கடையிலே எடுபிடி வேலை , ஓடுது வண்டி, அவருக்கு முன்னாலே ,பொட்டுன்னு ஒரு நாள் போயிடணும். இதுதான், இந்தக் கிருஷ்ணனிடம் வேண்டுதல் ' என்று கூடைக்குள் இருக்கும் அந்தக் குட்டிக் க்ரிஷ்ணனைக் காண்பித்தாள். கிருஷ்ணன் கோயிலில் மட்டும் இல்லை,இந்தக் கீரைக்காரியின் கூடையிலும் இருக்கிறான் என்று தோன்றியது அவளுக்கு .


அவன் வாயில் வெண்ணை அப்பியிருந்தது.' புள்ளைக்குப் பசிக்கும் இல்லே, அதான், அவனுக்குப் பிடித்த வெண்ணை , அப்பப்போ ஊட்டி விட்டுடுவேன்.' ஒரு கணம் உடல் சிலிர்த்தது திவ்யாவிற்கு. ஆற்று மண்ணைத் தோண்டியவுடன் ஊறி வரும் நீர் போல் ஊற்றெடுத்து வரும் இந்த அன்பைப் பெற, இந்தத் தாயைப் பெற என்ன புண்ணியம் செய்து இருக்க வேண்டும் அந்தக் குட்டிக் கண்ணன் ' என்று ஏதோ ஒரு எண்ணம்.


இதற்குள் பாட்டி 'அது சரி, என்னை விடு , உனக்கு எத்தனை புள்ளை' என்றவள் திவ்யா முகம் மாறியதை கவனித்து ' அம்மாடி மன்னிச்சுக்கோ, உடம்பைப் பார்த்தே தெரிஞ்சிருக்கணும் , புள்ளை பெத்த உடம்பு இல்லே, தெரியாம கேட்டுட்டேன் ' . ஆனா , ஒண்ணு தாயி , தோணுது சொல்லிடறேன் , இந்தக் குட்டிக்ரிஷ்ணன் ஏற்கனவே உனக்கு உரியவனை உனக்கு காண்பிச்சுட்டான். நடக்கும் ' என்றபடி, கீரையைக் கொடுத்து அம்மா கொடுத்த காசை வாங்கிக் கொண்டு கிளம்பியவளிடம். ஒரு நூறு ரூபாய் நீட்டினாள் திவ்யா.


' அந்தக் குணம் அப்படியே இருக்கும்மா உனக்கு, அப்போல்லாம், அஞ்சு ரூபாய் உங்கம்மா கீரைக்கு காசு கொடுப்பா, நீ பின்னாலேயே ஓடி வந்து பத்து ரூபாய் குடுப்பே , நீ சேர்த்து வச்ச காசு, வச்சுக்க பாட்டி, பாவமா இருக்கு ' ன்னு. நான் வாங்கிப்பேன். அந்தக் குணம் மாறலே உனக்கு இன்னும். அம்பது ரூபாய் கீரைக்கு காசு உங்க அம்மா கிட்டே , நீ நூறு ரூபாய். உனக்கு எல்லாமே ரெண்டு மடங்கு சந்தோஷமா திருப்பிக் கிடைக்கும் தாயி, உன் பிரிய அத்தையும் கொடுப்பாள். என் குட்டிக் கிருஷ்ணனும் கொடுப்பான் ' என்றபடி வாங்கிக் கொண்டாள்.


திரும்பியவளிடம், அம்மா ஒரு போட்டோ காண்பித்தாள். 'இதை நீ பார்த்திருக்க மாட்டே, அத்தையோட பழைய பெட்டியில் இருந்தது . அத்தை ,மாமாவோட இருக்கிற பழைய போட்டோ ' . அந்தப் போட்டோவில் ராபர்ட்ஸ் சிரித்துக் கொண்டு இருந்தான்.


-------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English   


திருடர் பயம் -சிறுகதை

 திருடர் பயம்  -சிறுகதை 

------------------------------

எனக்குத்  திருடர்கள் மேல் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை உண்டுங்க. திருடன் னு சொல்லாம திருடர் னு சொன்னதில் இருந்து நீங்க புரிஞ்சிக்கிட்டு இருப்பீங்க. காரணத்தையும் சொல்லிடுறேன்.


ஒரு தடவை , நாங்க வீட்டை விட்டு வெளியூர் போயிருந்தப்ப  ஒரு திருட்டு நடந்திடுச்சு . 'வீட்டை விட்டுட்டுப்  போகாம தூக்கிட்டா வெளியூர் போவீங்க' ன்னு குதர்க்கமா கேட்கக் கூடாது. சரி 'வெளியூர் ' போயிருந்தப்போ' . .  'வீட்டிலே இருந்தா நடக்குமா' ன்னு ஆரம்பிக்காதீங்க. சொல்ல விடுங்க சார்.


எங்கே விட்டேன். ம். திருட்டு. அது என்ன ஆச்சு . அவன் , இல்லை அவர் கஷ்டப்பட்டு கேட்டிலே வெளியிலே இருந்த பலத்த திண்டுக்கல் பூட்டை உடைச்சு , உள்ளே வந்திருக்கார் . குட்டைச் சுவர் தான். ஏறிக் குதிச்சே வந்திருக்கலாம். என்னவோ அவரோட தொழில் தர்மம். உடைக்கணும். அப்பதான் திருடின திருப்தி போலிருக்கு .  அப்புறம் பல    சாவிகள் உபயோகிச்சு கதவோட பூட்டைத் திறந்திருக்கார் . ஒரே சாவியிலும் திறந்திருக்கலாம். ஒரு யூகம் தான். நம்ம வாடகை  வீட்டுக் கதவாச்சே. கஷ்டமா இருந்திருக்கும்னு  நினைக்கிறதிலே ஒரு அல்ப சந்தோசம். 


வெளியே இருக்கிற மெயின் சுவிட்ச் ஆப் ஆகி இருந்ததாலே உள்ளே இருட்டிலே  கஷ்டப்பட்டிருக்கார் . எப்படித் தெரியும் னு கேட்கிறீங்களா. . அணைஞ்சு போன தீக்குச்சிகள் ரெம்ப கிடந்தது உள்ளே. ஒரு டார்ச் லைட் கூட இல்லாத ஏழைத்  திருடர் அவர்னு நீங்க யூகிச்சுக்கலாம். 


எப்படியோ அலமாரியை உடைச்சு உள்ளே இருக்கிற துணிமணி எல்லாம் வெளியே எடுத்து எறிஞ்சு தேடி இருக்கார் . நாங்க திரும்பிப் போனப்போ இருந்த நிலைமை அது . பாவம் நகையோ பணமோ எதுவும் கிடைக்கலே. உள்ளே இருந்தது  கொஞ்சம் காசுகள். அதுவும் என் பையன் பொழுது போக்காய்ச் சேகரித்த அயல் நாட்டு நாணயங்கள். அதைப்  பார்த்து அவருக்கு இன்னும் கோபம் வந்திருக்கு. 


எப்படிக் கண்டு பிடிச்சேன்னா, ஹால்லே இருந்த டி வியைத் தள்ளி உடைச்சிருக்கார்  சார். அந்த டிவியும் பழைய காலக் குண்டாச் சட்டி டி வி. இந்தக் கால மெல்லிசான டி வி னா கூட தூக்கிட்டு போயிருக்கலாம். அந்தப் பெரிய டி வியை தூக்கிப் போட்டு உடைச்சிருக்கார்  சார்.  நீங்க அவர்  நிலைமையில் இருந்து யோசிச்சு பார்த்தா உங்களுக்குப் புரியும். அய்யய்யோ கோச்சுக்காதீங்க. நிலைமையை புரிஞ்சுக்கிறதுக்காகச்  சொன்னேன். 


அப்புறம் , போலீஸ் வந்து , போலீஸ் நாயும் வந்து , அதுவும் தெரு ஓரம் வரை போயி , அங்கே ஏதோ பிஸ்கட்  பாக்கெட்டை மோந்து பார்த்தது. அதுக்கு பாவம் பசியா இருக்கலாம். ஆனா, போலீஸ் அதை கர்சீப்பால் மூடி எடுத்துக்கிட்டாங்க. வீட்டிலே அவன் உடைச்ச கதவு , பீரோவில் கிடைக்காத கைரேகை அதிலே கிடைச்சிடுமாமாம் . 


எல்லாம் முடிஞ்சு எங்க கிட்டே கேட்டாங்க. 

'என்னென்ன திருடு போயிடுச்சு ' 

'ஒண்ணும்  திருடு போகலை சார் ' 


திருப்பியும் அதே கேள்வி , அதே பதில். 

கடுப்பான போலீஸ்

' திருடனைப் பிடிச்சா என்னத்தைக் கொடுன்னு கேட்கிறது ' 


நம்ம விடுறதா இல்லை .

'சார் , இந்தக் கதவை உடைச்சது, டி வியை உடைச்சதுக்கு காசு கேட்கலாம்ல  சார் '


'யோவ் , அவனே , வெறுத்துப் போயி அவன் பட்ட கஷ்டத்தில் , இங்கே வந்து வேர்வையை சிந்தி , ஒண்ணும் கிடைக்காமப்  போயிருப்பான்.  ஒண்ணு பண்ணுங்க. இன்னும் கொஞ்ச நாள் வெளியூர்  போயிட்டு வாங்க. உள்ளூர்த் திருடனா இருந்தா, உங்களைப்   பாத்தா, உதைக்காம விட மாட்டான். ' னாரு.


ஆனா நமக்கு வேலை  இருக்கே . போகலை. ஆனா, அப்பப்போ வெளியே போறப்ப, நம்மை யாரவது உற்றுப் பார்த்தா, இவர் அந்தத் திருடரா இருப்பாரோ ' ங்கிற  பயம் உண்டு. ஆனா நேற்று வரை அப்படி யாரும் வரலை . 


இன்னிக்கு காலையிலே ரோட்டிலே வாக்கிங் போறப்ப, ஓர் ஆளு ரெம்ப நெருக்கத்தில் வந்தாரு .

'ஏன்யா , உனக்கு எதுக்கு இத்தனை பெரிய வீடு, வீட்டைப் பார்த்து ரெம்ப  இருக்கும்னு உள்ளே வந்தா, ஏதோ செல்லாத காசு தான் கும்பல் கும்பலா இருந்தது. இதிலே உன் டி வியை உடைச்சதுக்கு உனக்குப்  பைசா வேணுமா. தெரிய வந்தது. இந்தா ஐநூறு  ரூபாய் வச்சுக்கோ , இதை வச்சு , டிவியை ரிப்பேர் பண்ணி எடுத்துக்கிட்டு வீட்டைக் காலி பண்ணிட்டு ஏதாவது குடிசையில் போய்க்  குடியேறு. அடுத்து  இந்தப் பெரிய வீட்டுக்கு வர்றவனாவது ,பசையுள்ள ஆசாமியா இருக்கான்னு பார்க்கிறேன் ' 


'சொல்லிட்டு  விடு விடுன்னு போயிட்டார்  சார். ஆளு ஓங்கு தாங்க முரட்டு ஆளாய் இருந்ததாலே , ஒண்ணும் பேசாம ,ஐநூறு நூறு வாங்கிட்டு வந்திட்டேங்க. வீடு பாத்துக்கிட்டு இருக்கேங்க. சின்ன வீடா, திருடருக்குப் பிடிக்காத வீடா இருந்தா சொல்லுங்க ப்ளீஸ் . திருடருக்குப்  பிடிச்சது, பிடிக்காதது  உங்களுக்கு எப்படித் தெரியும்னு கோச்சுக்காதீங்க. ப்ளீஸ் சார்', 


--------------------நாகேந்திர பாரதி  


My Poems/Stories in Tamil and English   


எந்திரிங்க அப்பா - சிறுகதை

 எந்திரிங்க அப்பா - சிறுகதை 

------------------------

'பார்த்து வாடா , கருவை முள்ளு ரெம்பக் கிடக்கு '

செருப்பு இல்லாத கால்கள்தான் இருவருக்கும். அவர்கள் நடந்து போனது ஒரு குறுக்குப் பாதையில் . ராமநாதபுரம் சென்று சினிமா பார்க்க .


வழக்கம் போல் அந்த வாரமும் வார இறுதியில் ஆவலோடு பார்த்துக் கொண்டு இருந்தான் ஆரம்பப் பள்ளி வாசலை. அதோ வந்து விட்டார் அப்பா. கடைசி மணி அடிக்கும் முன்பே வந்து விடுவார் பக்கத்துக் கிராமத்தில் இருந்து அவன் அப்பா. வாத்தியாரிடம் சொல்லிவிட்டு ஓடி வரும் அவனை அணைத்துக் கொண்டு , புத்தகப் பையோடு அவன் தாத்தா வீட்டில் போய் பையைப் போட்டு விட்டு புறப்பட்டு விடுவார்கள் ராம்நாட்டுக்கு சினிமா பார்க்க.


போகும் வழியெல்லாம், கருவைக் காடும் , அங்கங்கே தேங்கிய தண்ணீரோடு சில கண்மாய்களும். ஒத்தையடிப் பாதையில் நடக்கும்போது பார்க்கப் போகும் எம் ஜி ஆர் படச் சண்டைக்காட்சிகளின் கனவுகளோடு .


'இந்தப் படத்திலும் சிலம்புச் சண்டை உண்டா அப்பா '

'இருக்கும்னுதான் நினைக்கிறேன் , இல்லைன்னாலும் எல்லாச் சண்டையிலும், அந்தக் கை கால் ஸ்டைல் வந்துடும்டா, நல்லா இருக்கும் '.


'அப்பா, அடுத்து எப்பப்பா மீன் பிடிக்கப் போகலாம்'

முன்பு ஒருமுறை உள்ளூர் கண்மாயில் அப்பா வேட்டியின் முனையை ஒரு பக்கம் பிடித்துக் கொண்டு இடுப்பளவு ஆழத்தில், அலசி வீசியதில் அகப்பட்ட கெண்டையும், கெளுத்தியும். எத்தனை ருசி '

'போவோம்டா, உனக்கு லீவு விடட்டும்'


ராம்நாட் ரயில்வே லைன் வந்தாச்சு. தாண்டிப் போனா ராம்நாடுதான்.

டீக்கடை பன் ,காப்பீ . ஷண்முகா தியேட்டர், ராஜாராம் டாக்கீஸ் ரெண்டிலும் ரெண்டு ஷோ சினிமா பார்த்துவிட்டு, இரவில் பெரியப்பா வீட்டுத் திண்ணையில் படுத்துத் தூங்கி விட்டு அதிகாலை முதல் பஸ் பிடித்து தாத்தா வீட்டில் விட்டு விட்டு நடந்தே பக்கத்துக் கிராமம் சென்று விடுவார்.


இது தவிர, பக்கத்து ஊர்த் திருவிழா, உள்ளூர் முளைக்கொட்டு உற்சவம், சித்திரைத் திருவிழா, நடராஜர் ஆருத்ரா தரிசனம், சைக்கிள் ஓட்டும் திருவிழா, வள்ளி கல்யாணத் தெருக்கூத்து, அப்பாவுடன் சேர்ந்து சென்ற இடங்கள் எல்லாம் அவர் வாங்கிக் கொடுத்த தின்பண்டங்கள், சீனிச்சேவு, காராச்சேவு, கடலை மிட்டாய், சவ்வு மிட்டாய், நிலக்கடலை. இதுதவிர , கிராமம் செல்லும் போதெல்லாம், சீசனுக்கு ஏற்றபடி பதினி நுங்கு, பனங்காய். கிழங்கு, நெல் ஒப்படியின் போது வாங்கித்தரும் நிலக்கடலை, மொச்சைப்பயறு, பண்டிகைக்கு ஏற்றபடி, கரும்பு ,கிழங்கு, பயறு .எந்தத் திண்பண்டத்தைப் பார்த்தாலும் அப்பா நினைப்புதான். அதுவும் நுங்கை , நறுக்கி , கட்டைவிரல் விட்டு உறிஞ்சிச் சாப்பிடும் கலையும் அவர் சொல்லிக் கொடுத்த கலைதானே.


முதுமையில் தளர்ந்தபின்பு கிராமத்தில் இருந்து கூட்டி வந்து மதுரையில் வீடு பிடித்து இருக்க வைத்தபின்பு , சில வருடங்களில், சர்க்கரை வியாதியில் எடுத்த கால்களை எண்ணி எண்ணி ஏங்கிய அவர் ஏக்கம். கண்ணீரும் வார்த்தையுமாய் எத்தனை முறை.. மூன்று கிராமம் முழுக்க எத்தனை வயல்கள். எத்தனை வேலையாட்கள், தானும் சேர்ந்து விதைப்பது, நாற்று நடுவது முதல், ஒப்படி வரை உழைத்த கால்களின் , காலங்களின் கண்ணீர்க் கதைகள் அவை.


கால்கள் மட்டுமா, இளம் பருவத்தில், தோளில் தூக்கிச் சென்ற அந்தக் கரங்கள் , கல்லூரி விடுதிக்கு வந்த மணி ஆர்டரில் நுணுக்கி எழுதிய விரல்கள் . 'சனிக்கிழமை தவறாம எண்ணைய் தேய்ச்சுக் குளி, உடம்பைப் பார்த்துக்கோ, படிப்பைப் பற்றி உனக்குச் சொல்ல வேண்டியதில்லை ' வார்த்தைகள் இருக்கின்றன .


எல்லாம் மூடப்பட்டு , முகம் மட்டும் தெரிய ,முகத்தை மூடச் சொல்லி, கொடுத்த , வறட்டி ஒன்றோடு நிற்கிறான். உடம்பு முழுக்க விறகுகளும் , வறட்டிகளும் மூடி இருக்க , முகத்தை மூட விருப்பம் இன்றி நிற்பவனை மூடச் சொல்லி நிர்ப்பந்திக்கும் உறவினர். மூடப் போகும்போது ‘முகம் சிரிக்காதா, எழுந்து விட மாட்டாரா, என்ற எண்ணத்தோடு . அழுகை பொங்கி வர, அணைக்கும் கரங்கள். இவை அப்பாவின் கரங்கள் இல்லை.


ஒவ்வொரு முறை , அயல்நாட்டில் இருந்து வந்து பார்த்துச் செல்லும்போதெல்லாம் பார்க்கும் ஏக்கப் பார்வையில் தெரிந்த எண்ணம். 'இனி எப்போது வருவாய், வரும்போது நான் உயிரோடு இருப்பேனா' . இதோ சுடுகாட்டில், 'வந்திட்டேன் அப்பா, எந்திரிங்க '


--------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


அப்பா - கவிதை

 அப்பா - கவிதை 

———-

வட்ட எருவை வைத்தபோது

எட்டிப் பார்த்த நினைவுகள் எத்தனை


இந்த முகத்திற்கு இறுதி நாளா

இனிமேல் இல்லையா எழுந்து நடப்பது


வரப்பில் நடந்த கால்கள் எங்கே

நுங்கை ஊட்டிய விரல்கள் எங்கே


அதிர்ந்து சிரித்த சிரிப்பு எங்கே

சுமைகள் தாங்கிய தோள்கள் எங்கே


ஒவ்வொரு முறையும் பிரியும் போதும்

இனிமேல் பார்ப்பேனே என்ற ஏக்கத்தை


உதட்டில் வெடித்து முழுங்கப் பார்த்து

முடியா உணர்வைக் கண்ணில் காட்டி


சிரித்து மழுப்பி அனுப்பி வைத்த

தந்தைப் பாசத்தின் தகவல் எங்கே


பிறப்பும் இறப்பும் வாழ்வின் ஒழுங்கென

புரிந்தும் கூட அடக்க முடியாத


அழுகை தந்த அன்பின் உருவம்

அப்பா எங்கே , அப்பா எங்கே


——-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English




வீட்டுக்கு வீடு - கட்டுரை

 வீட்டுக்கு வீடு - கட்டுரை  -------------------------- 'அப்படி என்னங்க கதை கவிதைன்னு எழுதிக்கிட்டு, பாட்டு பாடிக்கிட்டு , பேசாம பேரன் பே...